போனஸ் பங்குகளை அறிவித்த முதலீட்டு நிறுவனம்.. வாவ்..!

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு நிறுவனங்கள் ஈவுத்தொகை, பங்கு பிரிப்பு, போனஸ் பங்கு என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் மோனார்ச் நெட்வொர்த் கேபிடல் லிமிடெட் (Monarch Networth Capital Ltd) நிறுவனம், தங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது.
ஜூலை 28ஆம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தங்கள் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கக் கூடிய நபர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான ரெக்கார்ட் டேட் குறித்த தகவலை நிறுவனம் என்னும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் முதன்முறையாக இந்த நிறுவனம் தங்களின் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக ஈவுத்தொகைகளை வழங்கி வருகிறது.
மோனார்ச் நெட்வொர்த் கேபிடல் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்திருக்கக் கூடிய ஆவணத்தில் தங்கள் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் அவர்கள் வைத்திருக்கும் ஒரு பங்குக்கு ஒரு போனஸ் பங்கு என்ற விகிதத்தில் பங்குகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கான ரெக்கார்ட் டேட் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஒழுங்குமுறை அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
தங்களுடைய நிறுவனத்தின் உள்ள பணக் கை இருப்பை குறைக்கவும் ஈபிஎஸ் அளவை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் பங்குக்காக எந்த ஒரு தொகையையும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. அவர்கள் இத்தனை காலம் தங்கள் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்து இருந்ததற்காக கிடைக்கும் ஒரு பரிசு எனக் கூறப்பட்டுள்ளது.
நிறுவனம் அறிவிக்கக்கூடிய எக்ஸ் டேட்டுக்கு முன்பு யாரெல்லாம் இந்த பங்குகளை வாங்கி இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே போனஸ் பங்குகள் கிடைக்கும். ஒருவேளை நிறுவனம் குறிப்பிடக்கூடிய அந்த தேதி அன்று அல்லது தேதிக்குப் பின்னர் பங்குகளை வாங்குபவர்களுக்கு போனஸ் பங்குகள் கிடைக்காது.
ஜூலை 29ஆம் தேதி நிலவரப்படி, மொனார்ச் நெட்வொர்த் கேபிடல் நிறுவனத்தின் பங்கு 648 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 302 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 689 ரூபாய். கடந்த ஓர் ஆண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 89 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.


